பெண்களுக்கு பாஜகவில் மகுடம் சூட்டப்படுகிறது - குஷ்பு நெகிழ்ச்சி பேட்டி

பெரும் தலைவர் காமராஜரை பற்றி திருச்சி சிவா அவதூறாக பேசியதற்காக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.;

Update:2025-07-24 18:32 IST

சென்னை,

குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு தமிழ் பத்திரிக்கைக்கு ஒன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா?

பதில்: பத்திரிக்கை ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜகவில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது பாஜகவில் என்ன பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் முக்கியம். பாஜகவை மேம்படுத்துவதற்காக நான் உழைத்து கொண்டிருக்கிறேன். நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜகவில் இருப்பவர்களுக்கு தெரியும்.

கேள்வி: தமிழக பாஜக-வில் பெண்களை சுதந்திரமாக அரசியல் செய்ய விடுகிறார்களா?

பதில்: ஜெயலலிதா இருக்கும் வரை, அதிமுகவில் அவர் மட்டும் தான் இருந்தார். அதன்பிறகு யார் ? கருணாநிதியின் மகள் என்பதால் தான் திமுகவில் கனிமொழிக்கு எம்பி பதவியெல்லாம் கிடைக்கிறது. எத்தனை பெண்களுக்கு திமுகவில் பதவி இருக்கிறது? எத்தனை பெண்கள் ஸ்டாலின் உட்காரும் வரிசையில் அமர்கிறார்கள்? ஆனால், பாஜகவில் திரவுபதி முர்மு, சுஷ்மா சுராஜ், நிர்மலா சீதாரமன், தமிழிசை, வானதி, ஸ்மிருதி இராணி என பாஜகவில் பிரதமர் உட்காரும் வரிசையில் அமர எத்தனையோ பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு பாஜகவில் மகுடம் சூட்டப்படுகிறது.

கேள்வி: தமிழக பாஜக-வில் அண்ணாமலை காலத்தில் இருந்த பரபரப்பு இப்போது இல்லை என்பதை உணர்கிறீர்களா?

பதில்: பாஜக தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் தானே நீங்கள் என்னிடம் பேட்டி எடுக்க வந்துருக்கிறீர்கள். இல்லையென்றால் வந்திருப்பீர்களா?

கேள்வி: காமராஜரை பற்றிய திமுக எம்பி திருச்சி சிவாவின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால், பெரும் தலைவர் காமராஜரை பற்றி திருச்சி சிவா அவதூறாக பேசியதற்காக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும். தமிழகத்தில் தனித்து நிற்க ராகுல்காந்திக்கு தைரியம் இருக்கிறதா? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதாக ராகுல்காந்தி அறிவித்தால், நான் அரசியலிலிருந்தே விலகுகிறேன்.

கேள்வி:தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியை ஏற்காமல் அதிமுக முரண்டு பிடித்தால் என்ன செய்யும் பாஜக?

பதில்: நாங்கள் யாரை நம்பியும் இல்லை. தனித்து செயல்படுவோம். கூட்டணி இருந்தால் எங்கள் இருவரின் எதிரியான திமுகவை வீழ்த்துவது எளிது. எனினும், கூட்டணி ஆட்சி குறித்து இரு தலைவர்கள் சேர்ந்து முடிவெடுப்பார்கள்.

கேள்வி: அதிமுக இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க சாத்தியம் இருக்கிறதா?

பதில்: அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

கேள்வி: 2029 தேர்தலுக்கும் பாஜக-வுக்கு மோடி என்ற சக்சஸ் பிம்பம் தேவைப்படுமோ..?

பதில்: ஒவ்வொரு நேரத்திலும் ஒரே தலைவர் இருக்க முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: 75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சொல்லி இருப்பது மோடியை குறிப்பிட்டுத்தான் என்கிறார்களே..?

பதில்: இதற்கு நான் பதில் கொடுக்க முடியாது.

கேள்வி: சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக-வால் இறக்கிவிடப்பட்டிருப்பவர் தான் நடிகர் விஜய் என்கிறதே திமுக?

பதில்: விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், சிறுபான்மையினரின் வாக்குகள் நமக்கு வராது என திமுகவினர் பயப்பட தொடங்கி விடார்கள். எனவே, திமுகவின் குறைகளை அவர்களாகவே வெளிப்படுத்தி வருகிறார்கள். 'மைண்ட் வாய்ஸ்' என்று திமுக சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறது.

கேள்வி:கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் இம்முறையும் அங்கே போட்டியிடுவீர்களா?

பதில்: குஷ்பு எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும். என் கையில் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்