படுக்கைக்கு வர மறுத்த மனைவி... கீழே தள்ளி தொழிலாளி செய்த கொடூர செயல்
மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை செல்வி எடுத்துக்கொண்டு இருந்தார்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி செல்வி(39) என்ற மனைவியும், வினித்(24), விக்ரம்(22) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மூத்த மகன் வினித் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மது குடித்து விட்டு வாசலில் அமர்ந்திருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை செல்வி எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் சென்ற ரமேஷ், தனது மனைவி செல்வியை படுக்கைக்கு வர அழைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு வினித், சாப்பிடாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் ரமேஷ் தொடர்ந்து செல்வியை படுக்கைக்கு வர வற்புறுத்தியதாகவும், அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், செல்வியை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால் செல்வி கூச்சலிட்டார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ரமேஷ், செல்வி கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தகவலின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவூர் ரெயில்வே கேட் அருகே பதுங்கி இருந்த ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.