காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
கோப்புப்படம்
மதுரவாயல்,
மாங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த ஈனோக் (29 வயது) என்பவர் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இளம்பெண் வேலை முடிந்து தனியார் நிறுவனத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஈனோக், மீண்டும் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு மறுத்ததால் கையால் இளம்பெண்ணை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதில் காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈனோக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.