வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா
விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.;
கோவை,
கோவையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தவெகவுக்கு கட்டமைப்பு இருக்கிறதா? இளைஞர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் கேட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியாது, கோவையில் இறங்கிய விஜய், மக்களின் கட்டமைப்புதான் தவெகவின் கட்டமைப்பு. காங்கிரஸ், திமுக போல தவெக 100 வருட கட்சியாக உருவெடுக்கப் போகும் நாள் இன்று.
தற்போதுள்ள ஜனநாயக விரோத ஆட்சி செய்யும் தவறுகளைத் தாண்டி மக்களுக்கு 75 வருடங்களாக தீராத பிரச்னை உள்ளது. அதனை உங்கள் மூலம் உள்வாங்க, அதற்கென ஒரு கட்டமைப்பை உருவாக்க நாம் கூடி உள்ளோம். தவெகவில் அனைவரும் 30 வயத்திற்கு கீழ் உள்ள இளைஞர்கள். 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இதே இளைஞர்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
1977-இல் மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்தவர் எம்.ஜி.ஆர், இன்று மக்கள் ஆட்சியை கொண்டுவர ஜனநாயகன் தேவை. இந்தி எதிர்ப்பு போராட்ட புரட்சியை முன்னெடுத்தவர்கள் இளைஞர்கள். அப்படி ஒரு புரட்சியை இப்போது தவெக உருவாக்கிக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகள் கூட்டமோ, மாநாடோ நடத்தினால் மக்களை பணம் கொடுத்து அழைத்து வரும் நடைமுறைதான் உள்ளது. ஆனால், தவெகவின் பூத் கமிட்டி கூட்டத்திற்கே 100 சதவிகித கட்சியினர் வருகை தந்துள்ளனர். முன் எப்போது இல்லாத இளைஞர்கள் எழுச்சியை தவெகவில் பார்க்கிறேன்.
மற்ற கட்சிகளில் 40 வருடங்களாக ஒரே மாவட்டச் செயலாளர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இளைஞரணிச் செயலாளர்களாக இருப்பார்கள். வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர். ஊழல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை.
30 வருஷமா ஊழல் பண்ணதாலதான் ரெய்டு வருது. ரெய்டுக்கு நீங்க பயப்படும் நேரத்தில், நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்று அவர் கூறினார்.