முதலீடுகளை ஈர்த்து வந்த வெற்றிப்பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முறை வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அதாவது ரூ.85 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்கியே தீருவேன் என்ற இலக்கோடு தமிழ்நாட்டை கொண்டுசெல்ல அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறார். இதற்காக உள்நாட்டு தொழில் அதிபர்களையும், சர்வதேச தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழ்நாட்டில் அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்க சலுகைகளை விளக்கி கூறி வருவதைத்தொடர்ந்து, புதுப்புது தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால் தமிழ்நாடு தொழில் மயமாகிவருகிறது. தனது முயற்சியின் அங்கமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நேற்று காலையில் சென்னை திரும்பியுள்ளார்.
‘டி.என். ரைசிங்’ அதாவது தமிழ்நாடு உயர்கிறது என்ற பெயரில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜெர்மனிக்கு சென்று தொழில் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார். குறிப்பாக பி.எம்.டபிள்யூ. நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய நேரத்தில், கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பி.எம்.டபிள்யூ. காரில் அவர் கையெழுத்திட்ட படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தனர். ஜெர்மனியில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசியதன் விளைவாக 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ரூ.7,020 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அடுத்து இங்கிலாந்துக்கு சென்றார்.
அங்கு அவர் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு மற்றும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்யும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுபோல ஏற்கனவே தமிழ்நாட்டில் இருதொழில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அஸ்ட்ராஜெனைகா நிறுவனம் தனது 3-வது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. ஆக இந்த இரு நாடுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பயணத்தில் 33 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடு ரூ.15,516 கோடியாகும். இதன்மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் சிறப்பம்சமாக 10 நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ளன. பெரியாருக்கு புகழ் சேர்க்கும் வகையில், உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் அவருடைய படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.
அங்கு அவர் ஆற்றிய உணர்ச்சிமிகு உரை பெரியாரின் புகழை மேலும் உச்சத்துக்கு கொண்டுசென்றது. தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்த ஜி.யு.போப் பாதிரியாரின் கல்லறைக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியது தமிழ் நெஞ்சங்கள் மனதை குளிர்வித்தது. அம்பேத்கர் லண்டன் நகரில் படித்தபோது அவர் வசித்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது. இதுபோல காரல் மார்க்ஸ் நினைவிடத்துக்கு சென்று செவ்வணக்கம் செலுத்தியது தத்துவ மேதைகள் மீது அவருக்கு இருக்கும் பற்றை சுட்டிக்காட்டியது. முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குவிக் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்லி நகரில் நிறுவியதற்காக அவரது குடும்பத்தினரும் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை சேர்ந்தவர்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை எந்த முதல்-அமைச்சரும் செய்யாத சாதனையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முறை வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். மொத்தத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தற்போதைய பயணமும் கடந்த முறைகளைப்போலவே அனைத்து கோணங்களிலும் வெற்றிகரமான பயணமாகவும் முத்திரை பதிக்கும் பயணமாகவும் இருந்தது.