எட்டாத உயரத்துக்கு செல்லும் தங்கத்தின் விலை

விலைவாசி உயர்வையும் தாண்டி தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகிறது.;

Update:2025-06-21 06:22 IST

தற்போது பணத்தைவிட விலை மதிப்பு மிகுந்த ஆபரணப்பொருளாகவும், சேமிப்பாகவும் கருதப்படுவது தங்கம்தான். நாள்தோறும் தங்கத்தின் விலையை பார்ப்பதே மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிவிட்டது. ஏனெனில் தங்கத்தின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்துக்கொண்டே போகிறது. ஒவ்வொருநாளும் தங்கத்தின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களே முக்கிய செய்தியாகிறது. ஏறிக்கொண்டே இருக்கும் தங்கத்தின் விலை சில நாட்களில் சற்று இறங்கினால் அடுத்தநாளே இறங்கிய வேகத்தைவிட அதிக வேகத்தில் ஏறிவிடுகிறது. கிராமங்களில் 'சாண் ஏறினால் முழம் சறுக்கும்' என்பார்கள். ஆனால் தங்கத்தின் விலையை பொறுத்தமட்டில், 'சாண் இறங்கினால் முழம் ஏறிவிடுகிறது' என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது.

நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.73,680. வேறு எந்த சொத்துகளையும்விட தங்கத்தில் செய்யப்படும் முதலீடு அதிக வருவாயை தருவதே தங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்படும் அதிக நாட்டத்துக்கு காரணம் ஆகும். தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 37.3 சதவீத லாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ளது. ஆனால் நிப்டியில் அதாவது பங்கு சந்தையில், 5.91 சதவீதமே லாபம் கிடைத்துள்ளது. தங்கத்தைப்போல வெள்ளியும் 21 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளில் 29 சதவீதமும், 3 ஆண்டுகளில் 25 சதவீதமும் லாபத்தை தந்துள்ளது. இதே தொகையை பங்கு தொகையில் முதலீடு செய்து இருந்தாலும், தங்கத்தின் அளவுக்கு லாபத்தை தரவில்லை. விலைவாசி உயர்வையும் தாண்டி தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகிறது. 'நான் உயர உயர போகிறேன்' என்றே தங்கம் சொல்வதைப்போல இருக்கிறது. சேமிப்பு பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் போல தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 'டிவிடெண்டோ' வட்டியோ தருவதில்லை. வாங்கும்போது இருக்கும் மதிப்பைவிட அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே போவதுதான் இதனால் கிடைக்கும் லாபமாகும்.

தற்போது இந்தியாவில் குடும்பங்களில் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவு 25 ஆயிரம் டன்னாக இருக்கிறது. இது முதல் 10 நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கி அதாவது, மத்திய வங்கிகளில் இருக்கும் தங்க இருப்புகளைவிட அதிகமாகும். ரிசர்வ் வங்கிகளைப் பொறுத்தவரையில், போலந்து தேசிய வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, சீனாவில் உள்ள மக்கள் வங்கி ஆகிய 3 வங்கிகள் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆயிரம் டன் தங்கம் வாங்கியிருக்கிறது. முந்தைய ஆண்டுகளைவிட இருமடங்கு இது அதிகம்.

தங்கத்தின் விலை இப்படி ஏறிக்கொண்டே போவதற்கு அவ்வப்போது பல காரணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இப்போது தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பதற்கு காரணம் சரியாக கணிக்க முடியாத அமெரிக்க வர்த்தகக்கொள்கை, பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மை, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, அமெரிக்காவில் குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதம் ஆகியவை மட்டுமல்லாமல் ரஷியா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் ஆகியவையும் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நிலையற்ற மற்றும் ஸ்திரத்தன்மையற்ற பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள், தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்ற எண்ணத்தை முதலீட்டாளர்களிடம் உருவாக்கியுள்ளது. ஜே.பி.மார்கன் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை அடுத்த ஒரு ஆண்டுக்கு இதே வேகத்தில்தான் உயர்ந்துகொண்டே போகும் என்பதும், மக்களை தங்கத்தின் மீது முதலீடு செய்ய வைத்து இருக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்