இந்தியாவின் சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.;
சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்று திரும்பிய நேரத்தில், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? என்று அவரிடம் கேட்டார். அதற்கு ராகேஷ் சர்மா, லதா மங்கேஷ்கர் பாடிய, 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' என்ற பாடலையே பதிலாக தந்தார். உலகத்திலேயே இந்தியாதான் சிறப்பான நாடாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இப்போது இந்தியாவில் இருந்து முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று அங்கு 14 நாட்கள் தங்கியிருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டு இருந்தபோது அவர் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது வரைபடத்தில் பார்ப்பதைவிட இந்தியா பிரமாண்டமாக இருக்கிறது என்றார்.
விண்வெளி வீரர்களின் வீடாகவும், பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தும் ஆய்வுக்கூடமாகவும் திகழும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இது 1998-ம் ஆண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டது. இதன் எடை 4 லட்சத்து 20 ஆயிரம் கிலோவுக்கு அதிகமாகும். இவ்வளவு எடையுடன் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களுடன் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 16 முறை சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை சுற்றுகிறது. இதனால் அதில் தங்கியிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 16 சூரிய உதயங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் பார்க்கமுடியும்.
என்ன விசித்திரமான காட்சிகளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் வீரர்கள் பார்க்கமுடிகிறது என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. இப்போது விண்வெளிக்கு ஆக்சியம்-4 என்ற பயணத்தில் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த குழுவுக்கு கமாண்டராக இருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன். அவருக்கு இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 5-வது பயணமாகும். ஏற்கனவே அந்த நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். இந்த 4 பேரையும் சேர்த்தால் 11 பேர் ஆவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ அழைப்பு மூலம், சுபான்ஷு சுக்லாவிடம் பேசும்போது, உங்களது இந்த விண்வெளி பயணம் இந்தியாவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருக்கிறது என்றார். அதற்கு, சுபான்ஷு சுக்லா, இது என்னுடைய விண்வெளி பயணம் மட்டுமல்ல, இந்தியாவின் பயணம் என்று உணர்ச்சி பொங்க கூறினார். பிரதமரும் அவரிடம் உங்களுடைய பெயரே 'சுபம்' என்று இருக்கிறது. எனவே இந்த விண்வெளி பயணம் மங்களகரமான புதுயுகத்தின் தொடக்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு, நாட்டு மக்களுக்கும் நல்ல அறிவிப்பை அவருடன் பேசியதன் மூலம் தெரிவித்தார். அதாவது விரைவில் இந்தியா தன் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும். இதுபோல இந்திய விண்வெளி வீரர் நிலவில் கால்பதிப்பதும் நடக்கும். உங்களின் இந்த பயணம் இந்தியாவின் எதிர்கால முயற்சிகளுக்கெல்லாம் தொடக்கமாக இருக்கும் என்றார். பிரதமரின் இந்த அறிவிப்புகளெல்லாம் சாத்தியமாகும்போது கண்ணதாசன் எழுதிய, "நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது?" என்று ஒவ்வொரு இந்தியனும் பூரிப்புடன் பாடி கொண்டாடுவார்கள்.