2016-ம் ஆண்டு வரை பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு அவர்கள் இறுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம் சார்ந்த எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு சேர்க்கை நடந்தது. அதன் பின்னர் தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு என்ற நீட் தேர்வு நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, எங்கள் மாநிலத்துக்கு இந்த தேர்வு வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டினார். இதனால் அந்தாண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு கொடுக்கப்பட்டதே தவிர, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை எழுதித்தான் ஆகவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிலும் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நுழைந்துவிட்டது.
நீட் வினாத்தாள்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. என்ற மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், அந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் தனியார் பள்ளி மாணவர்களும், பயிற்சி மையத்தில் படிப்பவர்களால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறமுடிகிறது. தமிழக கல்வி திட்டத்தின் கீழ் வகுப்புகளை நடத்தும் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மற்றும் கிராமப்புற மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் மருத்துவ படிப்பு என்பது அவர்களுக்கு கனவாகவே இருந்து வந்தது.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த சில ஆண்டுகள் வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்கள். அரசு பள்ளி மாணவர்களும், மருத்துவக்கல்லூரியில் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததால் பல மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடிந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நெடுங்காலமாக கவர்னரிடம் கிடப்பில் இருந்த அந்த மசோதா மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, மீண்டும் அந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தார்.
மத்திய அரசாங்கம் கேட்ட பல விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. இறுதியில் இப்போது மத்திய அரசாங்கம் 'வித்ஹெல்டு' அதாவது நிறுத்தி வைத்து இருப்பதாக திருப்பி அனுப்பிவைத்துவிட்டது. இப்போது இதில் என்ன மேல் நடவடிக்கை எடுக்கலாம்? என்று ஆலோசிக்க சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுத்து, எந்தவித நடவடிக்கை எடுத்தாலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறும் நாள் சமீபத்தில் இல்லை. ஆக அதுவரை நீட் தேர்வு எழுதித்தான் தீரவேண்டும். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நீட் தேர்வு பயிற்சிகளையும், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கவேண்டும். அப்போதுதான் நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுதி தேர்ச்சி பெறவும் முடியும். நமது இலக்கு இந்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக்கல்லூரிகளில் சேரவேண்டும் என்பதுதான். அதை நோக்கியே அரசின் பயணம் செல்லவேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.