தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவாகியது.;
சென்னை,
குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை கீழடுக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் பரவலாக மழை பதிவாகியது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சூரியன் தலைகாட்டாததால் குளிர் பிரதேசங்களில் இருப்பது போன்ற குளிர்ச்சியான சூழல் நிலவியது. இது சென்னைவாசிகளை பரவசப்படுத்துவதாக இருந்தது. இதற்கிடையே வாரவிடுமுறை என்பதால் மெரினா கடற்கரை உள்பட நகரில் உள்ள பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் குவிந்தனர்.
இந்தநிலையில், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் தமிழகம், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.