ஒரு வாரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வாளர்கள் தகவல்

மேற்கு மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 17, 18-ந்தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.;

Update:2025-10-14 04:45 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது நாளைக்குள் (புதன்கிழமை) வீசத் தொடங்கும் என்பதால், தென் மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதுதொடர்பான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து நாளை முதல் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கான மழையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

அந்தவகையில் இந்த இடைபட்ட ஒரு வாரத்தில் கடலோர மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், உள்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி, 17, 18-ந்தேதிகளில் லட்சத்தீவு கடல் பகுதியில் தாழ்வுப் பகுதியாக மாறி, வலுவடைந்து தமிழக கடற்கரையைவிட்டு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகர இருக்கிறது. இதன் காரணமாக மேற்கு மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 17, 18-ந்தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர் மழைக்கோ, பலத்த மழைக்கோ வாய்ப்பு இல்லை என்றாலும், விவசாயிகளும், பண்டிகைகால வியாபாரிகளுக்கும் சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மழையாக இது இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்,

Tags:    

மேலும் செய்திகள்