வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-10-24 12:59 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கிடையில், வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது. இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ம் தேதி (நாளை மறுநாள்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27-ம் தேதி புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு உருவாகும் புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என பெயரிட தாய்லாந்து பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 27-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்