சென்னையில் அதிகாலையில் வெளுத்து வாங்கிய கனமழை
நகர்ப்புற பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.;
சென்னை,
தென்மேற்கு பருவமழை சற்று வலு இழந்து இருப்பதால், வளிமண்டலத்தில் காற்றின் வேக மாறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் பகலில் வெப்பமாகவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், பிற இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, காமராஜர் சாலை, மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழை காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் அதிகாலை வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.