தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை விரைவில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தென்மேற்கு பருவமழை, வரும் (அக்டோபர்) 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு /வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16-18 தேதிகளில் துவங்குவதற்கான சாத்தியம் உள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.