வங்கக்கடலில் நாளை உருவாகும் தீவிர புயலில் இருந்து தப்பியது சென்னை

புயல் நாளை மதியம் சென்னையை நோக்கிய திசையில் இருந்து சற்று விலகி ஆந்திரா கடலோரத்தை நோக்கி நகர தொடங்கும்.;

Update:2025-10-26 16:45 IST

சென்னை:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 780 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கில் 830 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு–மத்திய வங்கக் கடலில் நாளை (திங்கட்கிழமை) காலையில் தீவிர புயலாக மாறும். இந்த புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை மதியம் சென்னையை நோக்கிய திசையில் இருந்து சற்று விலகி, ஆந்திரக் கடலோரத்தை நோக்கி நகரத் தொடங்கும். அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு–வடமேற்கு நோக்கி நகரும். நாளை மறுநாள் 28-ஆம் தேதி (செவ்வாய்) காலைக்குள் ஒரு கடுமையான தீவிர புயலாக அது தீவிரமடையும். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கும். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்.

இந்த தீவிர புயல் வடக்கு–வடமேற்கு நோக்கி மேலும் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை (28-ஆம் தேதி) இரவு காக்கிநாடா அருகே உள்ள மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர மாநில கடற்கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். சில இடங்களில் இந்த காற்று மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தீவிர புயல் மோந்தா சென்னை நோக்கி வராமல் சற்று விலகி ஆந்திரா நோக்கிச் செல்வதால், சென்னை தீவிர புயல் தாக்கத்திலிருந்தும் அதிக மழையிலிருந்தும் தப்பியது எனலாம். தீவிர புயல் ஆந்திராவை நோக்கித் திரும்புவதால், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விட்டு விட்டு சில இடங்களில் கனமழை பெய்யும். இருப்பினும், இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

“வட தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகக் கடலோர பகுதிகள், ஆந்திரக் கடலோர பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகள், வங்கக் கடலின் பெரும்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்