அபுதாபி சென்ற விமானம்: நடுவானில் பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு - உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்

விமான பணியாளருக்கு தன்னார்வத்துடன் மருத்துவ சேவைகளை வழங்கிய தமிழக மருத்துவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.;

Update:2025-12-12 06:49 IST

அபுதாபி,

எத்தியோப்பியாவில் இருந்து அபுதாபிக்கு வரும்போது நடுவானில் விமான பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 2 தமிழக மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினர்.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அப்பா நகரில் இருந்து அபுதாபிக்கு எதிகாத் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கோபிநாதன் மற்றும் சுதர்சன் பாலாஜி ஆகியோரும் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பணியாளர்கள் பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தனர். அப்போது ஆண் பணியாளர் ஒருவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த மற்ற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விமான பணியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த தமிழக மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ உதவிகளை அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பணியாளருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் இருப்பதை கண்டறிந்த அவர்கள் விமானத்தில் இருந்த கையடக்க சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பணியாளர் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் இருவரும் கண்காணித்து வந்தனர்.

அபுதாபி சர்வதேச விமான நிலையம் வந்ததும் அந்த பணியாளரை மருத்துவ குழுவினர் பத்திரமாக சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். விமானத்தில் பணியாளருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தன்னார்வத்துடன் தமிழக மருத்துவர்கள் மருத்துவ சேவைகளை வழங்கியதற்கு மற்ற பணியாளர்களும், பயணிகளும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்