புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி - ஐ.நா. அறிவிப்பு

டிட்வா புயல் இலங்கை மக்களின் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.;

Update:2025-12-11 17:49 IST

கொழும்பு,

வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 638 பேர் உயிரிழந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 193 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்த புயலால் இலங்கையில் சுமார் 18 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அரசுக்கு, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான உதவியாக அடுத்த 4 ஆண்டுகளில் நிவாரண உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. சபை ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரான்ச் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஐ.நா. சபை மற்றும் பிற மனிதாபிமான கூட்டாளிகள் இணைந்து இலங்கைக்கான மனிதநேய முன்னுரிமை திட்டத்தை(HPP) தொடங்கியுள்ளோம். இதன்படி கல்வி, உணவு பாதுகாப்பு, விவசாயம், ஊட்டச்சத்து, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடனடி உயிர்காக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இலங்கையில் சுமார் 25 சதவீதம் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். டிட்வா புயல் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை கடுமையாக தாக்கியுள்ளது. சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில், இந்த துயரம் இலங்கை மக்களின் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஐ.நா. சபையின் மனிதநேய பாதுகாப்புத் திட்டத்திற்கு பங்களிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்த திட்டத்திற்காக ஐ.நா. சபை ஏற்கனவே ரூ.85 கோடியை பெற்றுள்ளது. மேலும், வரும் மாதங்களில் ரூ.231 கோடி நிதியை திரட்ட ஐ.நா. திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்