கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் 5 நாட்களுக்குப்பின் தாய்லாந்தில் கைது
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், விடுதி ஊழியர்கள் 20 பேரும், வாடிக்கையாளர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்;
பாங்காக்,
வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற முயன்றனர். குறுகிய வாசல் என்பதால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியவில்லை.
அதில், சிலர் தரைதளத்தில் இருந்த சமையலறையில் புகுந்தனர். இதற்கிடையே, கூரையில் பற்றிய தீ, விடுதியின் பல பகுதிகளுக்கு மளமளவென பரவியது. அப்பகுதியே புகைமண்டலமானது.இதில், பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில், விடுதி ஊழியர்கள் 20 பேரும், வாடிக்கையாளர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர். விபத்து நடந்ததை அடுத்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பி சென்றனர். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.