தலீபான்களுடன் ஒத்துழைக்க சர்வதேச சமூகங்களுக்கு இந்தியா அழைப்பு
ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தாகி கடந்த அக்டோபர் மாதம் 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.;
நியூயார்க்,
ஆப்கானிஸ்தான் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்ய தலீபான்களுடன் நடைமுறை ரீதியான ஒத்துழைப்புக்கு சர்வதேச சமூகங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:-
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிலையான நன்மைகளை வழங்க உதவும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஐ.நா. சபையையும், சர்வதேச சமூகத்தையும் இந்தியா கேட்டுக்கொள்கிறது. தலீபான்களுடன் நடைமுறை ரீதியான ஒத்துழைப்புக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது. நேர்மறையான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையை இந்தியா தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்துக்கு ஆளாகி வருவதை நாங்கள் மிகுந்த கவலையுடன் பார்க்கிறோம். ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம். பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா ஒரு பக்கபலமாக இருந்து வருகிறது. மனிதாபிமான உதவிகளை வழங்குவதும் ஆப்கானிஸ்தான் மக்களின் திறன்களை வளர்ப்பதும் எப்போதும் இந்தியாவின் முன்னுரிமைகளாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தாகி கடந்த அக்டோபர் மாதம் 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.