திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
பீஜிங்,
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், திபெத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.54 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.33 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 86.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை 5.29 மணியளவில் ரிகடர் 5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.