போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி

பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.;

Update:2025-10-03 08:04 IST

கோப்புப்படம்

காசா,

சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சமரச திட்டத்தை உருவாக்கி உள்ளார். அதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் இயக்கத்தினரும் தங்களது பதிலை தெரிவிக்க பரிசீலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமரச திட்டம் அறிவித்த அன்றும் காசாவில் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல நேற்றும் பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. அதில் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு காசாவில், உதவி தொகுப்பு வாகனத்தை இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் உதவிக்காக காத்திருந்த பலர் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல மத்திய நகரான டெய்ர்-அல்-பலாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். காசா நகரில் ஒருவரின் இறந்த உடலும், பலர் காயம் அடைந்த நிலையிலும் மீட்கப்பட்டு உள்ளதாக சுகாதார நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல், சமரச முயற்சியை கடினமாக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக காசா நகரில் எஞ்சியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேலின் தாக்குதலின் "முழுப் படையையும்" எதிர்கொள்ள அல்லது தப்பிச் செல்ல இது அவர்களின் "கடைசி வாய்ப்பு" என்று கூறியதால், காசா முழுவதும் அதிகாலை முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்