வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை
வங்காளதேசத்தில் டிசம்பர் மாத மத்தியில் இருந்து பரவி வரும் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வருகிறது.;
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். வங்காளதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர். இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது. இதில், வன்முறை கும்பலின் தாக்குதலில் இந்துக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6 இந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவராக இருப்பவர் அஜிஜுர் ரகுமான் முசாபீர். அவர் தலைநகர் டாக்காவில் தேஜ்துரி பஜார் பகுதியில் பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நேற்றிரவு 8.40 மணியளவில் கடுமையாக தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவர் படுகாயமுற்றார். அவருடன் மற்றொரு நபர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், முசாபீர் கொல்லப்பட்டார்.
அவருடன் சுடப்பட்டு, காயமடைந்த மற்றொரு நபர் டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்கா நகரின் வடக்கு பகுதிக்கான கட்சியின் தன்னார்வலர் பிரிவுக்கான முன்னாள் பொது செயலாளராக இருந்தவர். வங்காளதேசத்தில் டிசம்பர் மாத மத்தியில் இருந்து பரவி வரும் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வருகிறது.