நேபாளம்: இடைக்கால அரசின் தலைவராக சுசீலா கார்கி பதவியேற்பு
பிரதமர் பதவியை கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.;
காத்மண்டு,
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் தடுக்க முற்பட்டதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 51 பேர் உயிரிழந்தனர்.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நேபாளத்தில் கே.பி.சர்மா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது.
பிரதமர் கே.பி.சர்மா பதவி விலகி அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். அதன்படி, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று முன் தினம் ஆன்லைன் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நேபாளத்தின் இடைக்கால தலைவராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை (வயது 73) தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இடைக்கால அரசுன் தலைவராக பதவியேற்கும்படி சுசீலா கார்கிக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை சுசீலா கார்கி ஏற்றுக்கொண்டார்
இந்நிலையில், நேபாள அரசின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி இன்று பதவியேற்றுக்கொண்டார். இரவு 9 மணிக்கு நேபாளத்தின் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சுசீலா பெற்றார். இதையடுத்து,நேபாள நாடாளுமன்றத்தையும் கலைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேபாள அரசின் இடைக்கால தலைவராக (பிரதமர்) பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தனது மந்திரி சபையை தேர்வு செய்ய உள்ளார். அதன்பின்னர், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நேபாளம் பிரதமர் சுசீலா தலைமையிலான அரசின் வசம் செல்கிறது. முதற்கட்ட நடவடிக்கையாக அவர் நேபாளத்தில் நிலவு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தீர்வுகாண்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.