அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.;
டெல் அவிவ்,
மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல், கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக, காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர் மூலம் மேலும் மோசமடைந்து உள்ளது.
இந்த போரில் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கு இஸ்ரேல் பெரும் சேதத்தை விளைவித்து உள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களை ஆதரித்து வரும் ஈரானுக்கு இது பெரும் ஆத்திரத்தை அளித்தது. எனவே ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபரில் 300-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி பெரும் சேதத்தை விளைவித்திருந்தது, ஈரான்.
இந்த சூழலில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக இஸ்ரேல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் சாட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் மேற்கத்திய நாடுகள் மதிப்பிட்டு வருகின்றன.
அதேநேரம் தங்கள் அணுசக்தி திட்டங்கள் அனைத்தும் அணு ஆயுதத்துக்கானது அல்ல எனவும், அமைதிக்கானவை என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் ஈரானின் இந்த கூற்றை சர்வதேச நாடுகள் நம்ப தயாரில்லை.
6-வது சுற்று பேச்சு வார்த்தை
எனவே அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. அத்துடன் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் 6-வது சுற்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓமனில் நடக்கிறது.
இதற்கிடையே அணு ஆயுத பலம் பொருந்திய ஈரான், தங்கள் இருத்தலுக்கு எப்போதும் அச்சுத்தல் என இஸ்ரேல் நினைக்கிறது. ஈரானின் அணு ஆயுதப்படுகொலைக்கு ஒருபோதும் ஆளாகக்கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு உறுதிபூண்டுள்ளார்.
அணு ஆயுதம்
ஈரான் சமீப காலமாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஆயுதமாக்கி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது. இதை தடுக்காவிட்டால் வெறும் குறைந்த காலத்திலேயே அதாவது ஒரு சில மாதங்களிலேயே ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்து விடும் என நேட்டன்யாகு கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ரகசியமாக அணு ஆயுதம் தயாரித்து விடும் என இஸ்ரேல் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
அதேநேரம் அமெரிக்காவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேறினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி விடும். அதுவும் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு தடையாக அமைந்து விடும் என கருதுகிறார்கள்.
மறுபுறம் ஈரான் அணுசக்தி திட்டத்தை ஆய்வு செய்வதற்கு தங்கள் மேற்பார்வையாளர்களுடன் ஈரான் ஒத்துழைக்கவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது. உடனே தாங்கள் 3-வது செறிவூட்டும் மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக ஈரானும் அறிவித்தது.
அதிரடி தாக்குதல்
அடுத்தடுத்து வெளியான இந்த அறிவிப்புகளால், இஸ்ரேல் இனியும் தாமதம் கூடாது என முடிவு செய்து ஈரானை தாக்க திட்டமிட்டது. அதன்படி நேற்று அதிகாலையில் ஈரானின் பல பகுதிகளை குறிவைத்து அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது.
குறிப்பாக அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அடங்கிய ராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் 200-க்கு மேற்பட்ட போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல பகுதிகள் இந்த தாக்குதலுக்கு இலக்காகின.
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலில் ஈரானில் பரவலாக பெரும் சேதம் விளைந்தது. குறிப்பாக ஈரானின் நட்டன்சில் உள்ள முக்கிய அணுசக்தி நிலையம் உள்பட பல அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டன.
விமான நிலையங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், ராணுவ தளங்கள் என பல பகுதிகள் சேதமடைந்தன. தலைநகர் உள்பட பல இடங்களில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய தளபதிகள், விஞ்ஞானிகள் பலி
மேலும் இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்தன.
மேலும் சில முக்கிய தளபதிகளும், அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஈரானில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் அறிவித்து உள்ளது.
ஈரான் பதிலடி
அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இதற்கான விளைவுகளை அந்த நாடு அனுபவிக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்து உள்ளார்.
அத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இதன்படி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது.
மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஈரான் ஏவுகணைகளால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை
இந்த தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதும், ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
அதேநேரம் தங்கள் நாட்டினர் மீதோ, சொத்துகள் மீதோ ஈரான் தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.
இதனிடையே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.