அழகாய் இருந்தது ஒரு குற்றம்...? மொட்டை அடித்து... ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை

நிதீஷ், அவருடைய சகோதரி நீத்து பெனி மற்றும் நிதீஷின் தந்தை ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என புகார் தெரிவிக்கின்றது.;

Update:2025-07-15 16:36 IST

ஷார்ஜா,

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (வயது 32). கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்ததும், கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அவர் ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந்தேதி விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் மரணம் அடைந்து கிடந்தனர். விபன்சிகா தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், தடய அறிவியல் ஆய்வில், அந்த குழந்தை, சுவாசம் தடைபட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. தலையணையால் அழுத்தி சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. விபன்சிகா தற்கொலை செய்வதற்கு முன்னர், அவருடைய மகள் கொல்லப்பட்டு இருக்க கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் இருந்து மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில், மனஅழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

இதுபற்றி கேரள போலீசாரிடம் விபன்சிகாவின் பெற்றோர், புகார் தெரிவித்து உள்ளனர். அதில், அவருடைய கணவரான நிதீஷ் வலியவீட்டில் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

விபன்சிகாவின் தாயார் சியாமளா கூறும்போது, திருமணம் முடிந்ததும், வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக மணியனை தொல்லை கொடுத்து வந்தார். அவள் சிவப்பாக இருப்பாள். நிதீசும் அவருடைய குடும்பத்தினரும் சற்று மங்கலான நிறத்தில் இருப்பார்கள். அவள் அழகாக தெரிய கூடாது என்பதற்காக அவளுடைய முடியை வெட்டினார். மொட்டை அடித்து விட்டார்.

பல பெண்களோடு நிதீசுக்கு தொடர்பு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பேத்தி வைபவியை உடலளவில் நிதீஷ் துன்புறுத்தினார் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஷார்ஜாவின் அல் நாடா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில மாதங்களாக விபன்சிகா தனியாக வசித்து வந்திருக்கிறார்.

ஆனால், நிதீஷ் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து கொடுத்த தொல்லையை பொறுக்க முடியாமல் விபரீத முடிவை அவள் எடுத்து விட்டாள் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதீஷ், அவருடைய சகோதரி நீத்து பெனி மற்றும் நிதீஷின் தந்தை ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என புகார் தெரிவிக்கின்றது. இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்