'இரண்டு அணு ஆயுத சக்திகள் மோதிக்கொள்வது கவலையளிக்கிறது' - அமெரிக்க துணை ஜனாதிபதி
பிராந்திய மோதல் ஏற்படாத வகையில் பயங்கரவாதத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : @VP
வாஷிங்டன்,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
இந்த சூழலில், இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது கவலையளிப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காத வகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதோடு தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவதை உறுதி செய்ய இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.