உயிரிழந்த குட்டியை பிரிய முடியாமல்.. பாசத்தால் தவித்த தாய் டால்பின் - மனதை உருக்கிய சம்பவம்
இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டால்பின் அதனை சுற்றி, சுற்றி வந்த சம்பவம் மனதை உருக்குவதாக இருந்தது.;
அபுதாபி,
அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபி அல் தப்ராவின் வடக்கு பகுதியில் சலாகா தீவு உள்ளது. இந்த தீவு பகுதியில் உள்ள கடலில் டால்பின்கள் உள்ளன. சமீபத்தில் பெண் டால்பின் குட்டி ஒன்றை ஈன்றது. இந்த குட்டி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் அந்த தாய் மிகவும் சோகமடைந்தது. எனினும் என்ன காரணத்துக்காக உயிரிழந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
எனினும் இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டால்பின் அதனை சுற்றி, சுற்றி வந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அந்த காட்சியை அவர்கள் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் உயிரிழந்த குட்டியை விட்டு பிரிய முடியாமல் தவித்த தாய் டால்பின் பாசப் போராட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியின் தகவல்படி இந்திய பெருங்கடல் பகுதியில் அபுதாபி கடல் பகுதியில் அதிகமான டால்பின்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் கடல் பகுதியில் செல்லும் போது பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.