பென்குயின் உடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து சென்ற டிரம்ப்; வைரலான புகைப்படம்
பென்குயின் ஒன்று தன்னுடைய கூட்டத்தில் இருந்து விலகி, தனியாக நடந்து செல்வது தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.;
வாஷிங்டன் டி.சி.,
டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்ட கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்காக நேட்டோ நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கும் அளவுக்கு கூட அவர் துணிந்து விட்டார். பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றார்.
எனினும், கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தின் மீது உள்ள விருப்பம் பற்றி டிரம்ப் தொடர்ச்சியாக பேசி வருகிறார். சமீபத்திய டாவோஸ் உச்சிமாநாட்டிலும் அதனை பற்றி பேசினார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை இன்று ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியுடன் உருவாக்கிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.
அதில் 79 வயது டிரம்ப், பென்குயின் ஒன்றுடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து செல்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, பென்குயினை தழுவுங்கள் என தலைப்பும் வைக்கப்பட்டு உள்ளது. அதில், அமெரிக்க கொடியுடன் பெனே்குயின் செல்வது போலவும், அதனை டிரம்ப் அழைத்து செல்வது போன்றும் படம் உள்ளது.
தொலைவில், கிரீன்லாந்து நாட்டு கொடியும் உள்ளது. இதனால், கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிரதேசம் பற்றிய அவருடைய விருப்பம் குறையாமல் உள்ளது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. சரி இதில், பென்குயின் எதற்கு காட்டப்பட்டு உள்ளது என தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில் பென்குயின் ஒன்று தன்னுடைய கூட்டத்தில் இருந்து விலகி, தனியாக நடந்து செல்வது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. அதில் பென்குயின்கள் கூட்டம் ஓரிடம் நோக்கி நகர்ந்து செல்லும்போது, ஒரேயொரு பென்குயின் மட்டும் வேறு திசையை நோக்கி பயணம் செய்கின்றது.
உணவோ அல்லது வேறு பென்குயின்களோ இல்லாத மலை பகுதியை நோக்கி அது நடந்து செல்லும் காட்சி, ஜெர்மனி நாட்டு ஆவண பட தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்ஜாக் என்பவரால் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணத்தில் காட்டப்பட்டு இருக்கும்.
அதில், பிற பென்குயின்கள் எல்லாம் உணவு மற்றும் வாழ்விற்காக கடல் அருகே இருக்கும்போது, இந்த ஒரு பென்குயின் உணவு, கடலே இல்லாத, பனிக்கட்டி, பனி மற்றும் மலைகள் இருக்கும் பகுதியை நோக்கி செல்கிறது. அதற்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
நமக்கு தெரியாத விசயம் அதற்கு தெரியும் என்றும், அது ஒரு நோக்கத்துடன் செல்கிறது என்றும் மனஅழுத்தம், தேவையற்ற சிந்தனை கொண்ட இந்த உலகின் சிக்கல்களில் இருந்து விடுவித்து, மெல்ல நடந்து போகிறது என சிலரும் தெரிவித்து உள்ளனர்.
அது வாழ்வில் தோற்று போன உணர்வால், எதிர்பார்ப்புகளில் இருந்து விலகி செல்கிறது, அமைதியான எதிர்ப்பு என்றும் சிலர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
இது அரிய நிகழ்வு என்றபோதும் விஞ்ஞானிகள் கூறும்போது, உடல்நல பாதிப்பு, இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவற்றால், திசையை அறியும் திறனை அது இழந்து விடும். சில பென்குயின்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் இதுபோன்று சுற்றி திரியும் என்றும் கூறுகின்றனர்.