3-ல் 2 பங்கு அமெரிக்க மக்களை தாக்க உள்ள பனிப்புயல்; டிரம்ப் எச்சரிக்கை
பனிப்புயலால் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ இங்கிலாந்து வரையிலான 2 ஆயிரம் மைல்கள் நீளம் வரை பனிப்படலம் பரவியிருக்கும்.;
ஜார்ஜியா,
அமெரிக்காவை வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவில் இந்த வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் தாக்க கூடும் என என்னிடம் எடுத்து கூறப்பட்டது.
இதுதொடர்பாக மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து என்னுடைய அரசு செயல்பட்டு வருகிறது. அதனை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்கிறோம். அதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, மத்திய அமெரிக்கா முழுவதும் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் மித அளவு முதல் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட கூடும் என அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், மிக பெரிய அளவிலான பனிப்புயல் மற்றும் தீவிர குளிரை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
இதனால், 3-ல் 2 பங்கு மக்கள் பாதிக்கப்பட கூடும். இந்த பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் பனிப்படலம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ இங்கிலாந்து வரையிலான 2 ஆயிரம் மைல்கள் நீளம் வரை பரவியிருக்கும். வார இறுதியில் பனிப்புயல் கிழக்கு நோக்கி பயணிக்கும். இந்த பனிப்புயல் சூழலால், மின் இணைப்புகள் பாதிக்கப்பட கூடும். இதன் விளைவால், லட்சக்கணக்கானோருக்கு சில நாட்களை வரை மின் விநியோகம் தடைபட கூடும்.
இந்த பனிப்புயலை எதிர்கொள்ள ஏதுவாக, அலபாமா, ஜார்ஜியா, லூசியானா, அர்கான்சாஸ், டென்னஸ்ஸீ, மேரிலேண்ட் உள்பட 15 மாகாணங்களில் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரத்தில் ஏறக்குறைய அமெரிக்கர்களில் பாதிபேர், பூஜ்ய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையிலான குளிர்காற்றின் தாக்கங்களை எதிர்கொள்வார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, கூடிய வரை மக்கள் பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.