இந்தியா மீதான வரியை 25 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா திட்டம்?

ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.;

Update:2026-01-24 18:57 IST

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார். மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளதாகவும், விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.இந்த நிலையில், அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“ரஷிய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். தற்போது ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன. இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. இது ஒரு வெற்றியாகும்.இந்தியா மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 50 சதவீத வரி, 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம் என்றும் ஸ்காட் பெசென்ட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்