மக்களவை தேர்தல்; பஞ்சாப் ஹோஷியார்பூர் தொகுதியில் மத்திய மந்திரியின் மனைவியை களமிறக்கிய பா.ஜ.க.

ஹோஷியார்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி சோம்பிரகாஷின் மனைவி அனிதா சோம்பிரகாஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 10:02 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல்களை அரசியல் கட்சியினர் பல்வேறு கட்டங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பா.ஜ.க. சார்பில் மேலும் 7 வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் தொகுதியில் மத்திய மந்திரி சோம்பிரகாஷ் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய பட்டியலில் அவருக்கு பதிலாக அவரது மனைவி அனிதா சோம் பிரகாஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் சதாரா தொகுதியில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியைச் சேர்ந்த உதயன்ராஜே போசாலே போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதியில், அகாலி தளம் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பரம்பால் கவுர் சித்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரோஸாபாத் மற்றும் தியோரியா தொகுதிகளில், தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்களுக்கு பதிலாக விஷ்வதீப் சிங் மற்றும் சாஷங்க் மணி திரிபாதி ஆகியோருக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அபிஜித் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை பா.ஜ.க. சார்பில் மக்களவை தேர்தலுக்கான 430 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒடிசாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலையும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்