வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்பிய விவகாரம்: குஜராத் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Update: 2024-05-10 05:30 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 7-ந்தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் அங்குள்ள தாகேட் மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தாகேட் தொகுதிக்கு உட்பட்ட பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி. ஜஸ்வந்த்சிங் பாபோரின் மகன் விஜய் பாபோர் வாக்களிக்க சென்றார்.

அப்போது அவர் வாக்குச்சாவடிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். அதோடு நிற்காமல் வேறு 2 வாக்காளர்களின் ஓட்டையும் அவர் போட்டார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து, பார்த்தம்பூர் வாக்குச்சாவடியை பா.ஜனதாவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டது. இதனிடையே கள்ள ஓட்டு போட்ட குற்றச்சாட்டில் விஜய் பாபோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்