2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய ஏ அணி தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
image courtesy:PTI
பெங்களூரு,
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க ஏ தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் 134 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 34 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.