இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20: தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் கூறியது என்ன..?
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.;
புனே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா மற்றும் துபே தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் 3 விக்கெட்டும், ஓவர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறுகையில், "இந்த போட்டியை நாங்கள் மிகச்சிறப்பாக தொடங்கியதாகவே நினைக்கிறேன். போட்டியின் ஆரம்பத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பவர்பிளே வரை எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர்.
அதேபோன்று பேட்டிங்கில் நாங்களும் மிகச்சிறப்பாக தொடங்கி இருந்தாலும் இடையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது சரிவை ஏற்படுத்தும் விதமாக மாறியது. அதோடு துபேவின் கேட்சை முதல் பந்திலேயே நாங்கள் தவற விட்டோம். அவர் விளையாடிய இன்னிங்ஸ் போட்டியின் நிலைமையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அந்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் நாங்கள் பலமாக போட்டிக்கு திரும்புவோம்" என்று கூறினார்.