அனிகேத் வர்மா அரைசதம்... டெல்லிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: @IPL / @SunRisers / @DelhiCapitals / Aniket Verma
விசாகப்பட்டினம்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 1 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னிலும், அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னிலும், நிதிஷ் குமார் ரெட்டி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து அனிகேத் வர்மா மற்றும் க்ளாசென் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் க்ளாசென் 32 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த அபினவ் மனோகர் 4 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதன் காரணமாக ஐதராபாத்தின் இம்பேக்ட் வீரராக வியான் முல்டர் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிகேத் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.
அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து வியான் முல்டருடன், ஹர்ஷல் படேல் ஜோடி சேர்ந்தார். இதில் ஹர்ஷல் படேல் 5 ரன்னிலும், வியான் முல்டர் 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.