இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சரான அப்பல்லோ டயர்ஸ்

இந்திய வீரர்களின் சீருடையில் புதிய ஸ்பான்சரின் பெயரை பார்க்கலாம்.;

Update:2025-09-17 06:37 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக (டைட்டில்), ஆன்லைன் விளையாட்டு செயலியான டிரீம்11 நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. கடந்த மாதம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து டிரீம்11 விலகியது. இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆடும் இந்திய அணி வீரர்களின் சீருடையில் எந்த ஸ்பான்சர் பெயரும் இடம் பெறவில்லை.

இதற்கிடையே, புதிய ஸ்பான்சரை தேடிய இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. ஸ்பான்சர்ஷிப் உரிமம் கோரி அப்பல்லோ டயர்ஸ், கேன்வா, ஜே.கே.சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.

இந்த நிலையில் தகுதி மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு டெண்டர் விண்ணப்பத்தில் அதிக தொகையை குறிப்பிட்டு இருந்த, அரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தை புதிய ஸ்பான்சராக இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 2028-ம் ஆண்டு மார்ச் வரை 2½ ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அந்த நிறுவனம் மொத்தம் ரூ.579 கோடியை ஸ்பான்சர்ஷிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அளிக்கும்.

முந்தைய ஸ்பான்சரான டிரீம்11 மூன்று ஆண்டுக்கு ரூ.358 கோடிக்கு ஒப்பந்தமாகி இருந்தது. இப்போது அதை விட கூடுதல் வருவாய் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்க உள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் இருந்து இந்திய வீரர்களின் சீருடையில் புதிய ஸ்பான்சரின் பெயரை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்