ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் - இர்பான் பதான்

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;

Update:2025-09-28 10:05 IST

image courtesy:BCCI

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதன் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

முன்னதாக இந்த தொடரின் சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.

அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டும் கொடுத்து இலங்கையின் 2 விக்கெட்டுகளையும் எடுத்து மிரட்டினார். பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் துல்லியமான யார்கர் பந்துகளை வீசுவதில் ஜஸ்பிரித் பும்ரா போல திறமையும் தரத்தையும் கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் பாராட்டியுள்ளார். எனவே இறுதிப்போட்டியில் அவரை பெஞ்சில் அமர வைக்காதீர்கள் என்றும் பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “முதலில், அவர் மிகவும் கூலாக இருக்கிறார். அவர் அழுத்தத்தன் கீழ் பந்து வீசும் வாய்ப்பைக் கேட்கிறார். தேவைப்படும்போது பந்து வீசும் அவர் கடைசி ஓவரில் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசினார். அந்தப் பந்துகளை வீசுவதில் அவர் பும்ராவின் தோளுக்கு தோளாக இருக்கிறார். அவர் தரமிக்க பவுலர் என்று நான் நினைக்கிறேன்.

நான் முதல் நாளிலிருந்தே இதை சொல்லி வருகிறேன். இது இன்று மட்டுமல்ல. அவர் எப்போதும் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும், ஏனெனில் இரு முனைகளிலிருந்தும் யார்க்கர்கள் தேவைப்படும் சூழ்நிலைகள் உள்ளன. இன்று நீங்களே பார்த்தீர்கள். போட்டி கடைசி வரை சென்றது.

ஆனால் நமது அணி நீண்ட பேட்டிங் வரிசை தேவை என்று நினைக்கிறது. நீண்ட பேட்டிங் தேவைப்பட்டால், ஷிவம் துபே ஆல்-ரவுண்டராக விளையாடுவார். அவர் விளையாடினால், அர்ஷ்தீப் இடம் பெற மாட்டார். ஆனால், என் அணியில், அர்ஷ்தீப் எப்போதும் இருப்பார்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்