ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை குறுக்கிட வாய்ப்பா..? ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு..?
நடப்பு ஆசிய கோப்பையில் எந்த ஒரு போட்டியின் போதும் மழை குறுக்கிடவில்லை.;
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதன் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பா..?
நடப்பு ஆசிய கோப்பையில் எந்த ஒரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவில்லை. அதேபோல இறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என அங்குள்ள வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வானிலையை யாராலும் 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது.
ஒருவேளை மழை பெய்து போட்டியை இன்று தொடங்க முடியவில்லை என்றால் ஆட்டம் ‘ரிசர்வ் டே’-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.
ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு..?
ஒருவேளை ஆட்டம் மழை காரணமாக ரிசர்வ் டே-விலும் தொடங்க முடியாமல் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்படுகிறது.