பி.சி.சி.ஐ ஒப்பந்த பட்டியல் அறிவிப்பு... ஸ்ரேயாஸ், இஷானுக்கு இடம் - சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் புதுப்பிக்கப்படும்.;
Image Courtesy: @BCCI / @SunRisers / @IPL
புதுடெல்லி,
இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் புதுப்பிக்கப்படும். அந்த வகையில், இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கான 2024-25 ஆண்டு ஒப்பந்த பட்டியல் தற்போது பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 செப்டம்பர் மாதம் வரை இந்த ஒப்பந்த பட்டியல் இருக்கும். பி.சி.சி.ஐ ஒப்பந்த பட்டியலில் ஏ+, ஏ, பி, சி என மொத்தம் 4 கிரேடுகளில் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்தாண்டு இருந்த சிலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர், சில வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 கிரேடுகளில் வீரர்களின் சம்பளமும் மாறுபடும். அந்த வகையில், ஏ+ கிரேடில் நான்கு வீரர்களை பி.சி.சி.ஐ தக்கவைத்துள்ளது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா உள்ளனர். இவர்களுக்கு தலா 7 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
ஏ கிரேடில், முகமது சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் தற்போது இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு பி கிரேடில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் தற்போது ஏ கிரேடுக்கு வந்துள்ளார். இந்த ஏ கிரேடு வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
பி கிரேடு பட்டியலில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், கடந்தாண்டு உள்ளூர் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி பல கோப்பைகளை பெற ஸ்ரேயாஸ் உதவினார்.
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த இவர், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த வகையில், இவரை தற்போது இவர் பி கிரேடு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். பி கிரேடு வீரர்களுக்கு தலா 3 கோடி ரூபாய் கிடைக்கும்.
சி பிரிவில், ரின்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதார், துருவ் ஜுரெல், சர்பராஸ் கான், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய 19 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
கடந்தாண்டு இந்த பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கே.எஸ். பரத், ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் துருவ் ஜுரெல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட 8 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அஸ்வின் ஓய்வை அறிவித்ததால் அவர் ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
இஷான் கிஷன் கடந்தாண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. தற்போது அவரும் கம்பேக் கொடுத்துள்ளார். ஓராண்டில் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 5 டி20ஐ போட்டிகளில் விளையாடினால் அவர்களின் பெயரும் ஒப்பந்த பட்டியலின் சி கிரேடில் சேர்ந்துவிடுவார்கள். இந்த 4 கிரேடுகளில் மொத்தம் 34 வீரர்களை பி.சி.சி.ஐ தனது ஒப்பந்த பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.