ஐ.பி.எல். ஏலம்: கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட இந்திய வீரர்
ஐ.பி.எல். மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது.;
image courtesy: IPL
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்நிலையில் நாளை ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஏலப்பட்டியலில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு ஐ.பி.எல். அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அடிப்படை விலை ரூ. 30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சியில் பெங்கால் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.