சர்வதேச டி20 கிரிக்கெட்: விக்கெட் ஒன்று.. சாதனைகள் பல.. ஹர்திக் பாண்ட்யா அசத்தல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.;
image courtesy:PTI
தர்மசாலா,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா பல சாதனைகளை படைத்துள்ளார்.
அவை விவரம்:
* சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
* அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
* சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அந்த பட்டியல்:
1. அர்ஷ்தீப் சிங் - 112 விக்கெட்டுகள்
2. ஜஸ்பிரித் பும்ரா - 101 விக்கெட்டுகள்
3. ஹர்திக் பாண்ட்யா - 100 விக்கெட்டுகள்
* சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள், 100+ சிக்சர்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சிக்கந்தர் ராசா
2. முகமது நபி
3. விரந்தீப் சிங்
4. ஹர்திக் பாண்ட்யா