புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் தமிழக தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.;
image courtesy:twitter/@TNCACricket
சென்னை,
புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த தமிழக தலைவர் லெவன் அணி 9 விக்கெட்டுக்கு 567 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி 3-வது நாள் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 18 ரன்னுக்குள் எஞ்சிய 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அத்துடன் ஆட்டம் ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது.
இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வித்யுத் 7 விக்கெட்டுகளை அள்ளினார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் பிரதோஷ் ரஞ்சன்பால் தலைமையிலான தமிழக தலைவர் லெவன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் ஐதராபாத்- அரியானா அணிகள் சந்தித்தன. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஐதராபாத் 225 ரன்னும், அரியானா 208 ரன்னும் எடுத்தன. 17 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஐதராபாத் 254 ரன்னில் அடங்கியது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 272 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளில் பேட் செய்த அரியானா 62.4 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நிதின் சாய் யாதவ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தமிழக தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.