கரீபியன் பிரீமியர் லீக்: 2-வது அணியாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.;

Update:2025-09-20 09:46 IST

image courtesy:twitter/@TKRiders

கயானா,

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன முன்ரோ 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இவர்களில் ஹேல்ஸ் நிதானமாக விளையாட பூரன் அதிரடியாக விளையாடினார்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் பூரன் 50 ரன்களிலும், ஹேல்ஸ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பொல்லார்ட் (35 ரன்கள்), ரசல் (28 ரன்கள்) அதிரடியாக விளையாட டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய லூசியா கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன டிம் சீபெர்ட் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இந்திய நேரப்படி 22-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்