சண்டையை டிராவிட்தான் நிறுத்தினார்.. கிரேக் சேப்பலுக்கு பதிலடி கொடுத்ததை நினைவு கூர்ந்த சேவாக்
ஒரு டெஸ்ட் போட்டியில் பெரிய ரன்கள் அடிக்காவிட்டால் அணியிலிருந்து நீக்குவேன் என்று கிரேக் சேப்பல் மிரட்டியதாக சேவாக் கூறியுள்ளார்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் இவருக்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். சேவாக் ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறன் கொண்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர்.
அப்படிப்பட்ட அவரை 2006-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கவில்லை என்றால் அணியிலிருந்து நீக்குவேன் என்று அப்போதைய தலைமை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மிரட்டியதாக சேவாக் தெரிவித்துள்ளார். அப்போது தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையை ராகுல் டிராவிட் தடுத்து நிறுத்தியதாகவும் சேவாக் கூறியுள்ளார். ஆனால் அப்போட்டியின் முடிவில் சேப்பலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்த சேவாக் பேசியது பின்வருமாறு:- “கிரேக் சேப்பலின் வார்த்தைகள் என்னைப் புண்படுத்தின. ஒரு சமயம் நான் அதிக ரன்கள் எடுக்கவில்லை, அப்போது சேப்பல் என்னிடம், 'நீ உன் கால்களை நகர்த்தாவிட்டால், சர்வதேச அளவில் பெரிய ரன்கள் எடுக்க முடியாது' என்று கூறினார்.
அதற்கு நான், 'கிரெக், நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-க்கு மேல் சராசரியுடன் 6000 ரன்கள் எடுத்திருக்கிறேன்’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், 'அது முக்கியமில்லை' என்று கூறி, மீண்டும் 'நீ கால்களை நகர்த்தாவிட்டால் ரன்கள் எடுக்க முடியாது' என்றார். இதனால் நாங்கள் பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் எங்கள் சண்டையை நிறுத்தினார்.
மறுநாள் நான் பேட் செய்யப் போகும்போது, அவர், 'ரன்கள் எடு, இல்லையெனில் உன்னை நீக்குவேன்' என்றார். நான், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்' என்றேன். ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யப் போகும்போது, பயிற்சியாளரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கிறான் என்றால் நினைத்துப் பாருங்கள். அந்த சூழ்நிலையில் களமிறங்கிய நான் அதிரடியாக விளையாடி உணவு இடைவேளைக்கு முன் 99 ரன்கள் எடுத்தேன்.
டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழையும்போது, டிராவிட் அங்கு நின்றிருந்தார். நான் அவரிடம், 'உங்கள் பயிற்சியாளரை என் அருகில் வரவேண்டாம் என்று சொல்லுங்கள்' என்றேன். அதைத் தொடர்ந்து சாப்பிட்டு களமிறங்கிய நான் தேனீர் இடைவெளிக்கு முன் 184 ரன்கள் அடித்து அவுட்டானேன். பிறகு அவரை (சேப்பல்) பார்த்து, 'நான் கால்களை நகர்த்தினாலும் நகர்த்தாவிட்டாலும், எனக்கு ரன்கள் எடுக்கத் தெரியும்' என்று சொன்னேன்” என கூறினார்.