ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி
5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.;
அடிலெய்டு,
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 371 ரன்னும், இங்கிலாந்து 286 ரன்னும் எடுத்தன.
85 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 142 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி எஞ்சிய விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் 170 ரன்னில் (219 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) ஜோஷ் டாங்கு பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் (128 பந்து, 6 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 10 ரன்னிலும், கேப்டன் கம்மின்ஸ் 6 ரன்னிலும், நாதன் லயன் ரன் எதுவும் எடுக்காமலும், ஸ்காட் போலன்ட் ஒரு ரன்னிலும் வரிசையாக நடையை கட்டினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஆஸ்திரேலியா 84.4 ஓவர்களில் 349 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கடைசி 6 விக்கெட்டுகள் 38 ரன்னுக்குள் சரிந்தன. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். முடிவில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிக்கு 435 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதுவரை எந்த அணியும் எட்டிப்பிடிக்க முடியாத இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் அடியெடுத்து வைத்தனர். பென் டக்கெட் 4 ரன்னிலும், ஆலி போப் 17 ரன்னிலும் கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜோ ரூட், ஜாக் கிராவ்லியிடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஸ்கோர் 109 ரன்னை எட்டிய போது ஜோ ரூட் 39 ரன்னில் (63 பந்து, 5 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். டெஸ்டில் ஜோ ரூட் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்துவது இது 13-வது முறையாகும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 78 ரன் திரட்டினர்.
அடுத்து வந்த ஹாரி புரூக்கும், கிராவ்லிக்கு பக்கபலமாக இருந்தார். ஜாக் கிராவ்லி 102 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் 30 ரன்னில் நாதன் லயன் சுழலில் போல்டு ஆனார். அவர் அடுத்து அந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (5 ரன்) விக்கெட்டையும் காலி செய்தார். நிலைத்து நின்று ஆடிய ஜாக் கிராவ்லி 85 ரன்னில் (151 பந்து, 8 பவுண்டரி) நாதன் லயன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கி பெவிலியன் திரும்பினார்.
ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 63 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடியது. விக்கெட் கீப்பர் ஜாமி சுமித் 2 ரன்னுடனும், வில் ஜாக்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தலா 3 விக்கெட் அறுவடை செய்தனர்.
5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஜாமி சுமித், வில் ஜாக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். ஆனால் அந்த ஜோடி நீண்ட நேரம்நிலைக்கவில்லை. ஜாமி சுமித் (60) ரன்களிலும், வில் ஜாக்ஸ் (47) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோல்வியடைந்து. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது. மேலும் 5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.