டு பிளெஸ்சிஸ் அதிரடி சதம்.. எம்.ஐ. அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

இதில் முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் குவித்தது.;

Update:2025-06-30 10:38 IST

image courtey:twitter/@TexasSuperKings

டல்லாஸ்,

ஐ.பி.எல். போன்று அமெரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் (இந்திய நேரப்படி இன்று) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற எம்.ஐ.நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுமித் படேல் - கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் களமிறங்கினர். இதில் சுமித் படேல் 3 ரன்களிலும், அடுத்து வந்த சாய்தேஜா மற்றும் ஸ்டோய்னிஸ் தலா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பாப் டு பிளெஸ்சிஸ் அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். நியூயார்க் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருடன் இறுதி கட்டத்தில் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய டோனோவன் பெரீரா 53 ரன்களில் (20 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. டு பிளெஸ்சிஸ் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ.நியூயார்க் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் கீரன் பொல்லார்டு தவிர ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய எம்.ஐ.நியூயார்க் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 70 ரன்கள் அடித்தார். டெக்சாஸ் தரப்பில் அகீல் ஹொசைன் விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்