துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய, வடக்கு மண்டல அணிகள் அரையிறுதிக்கு தகுதி
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மத்திய மண்டல அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் அடித்தது.;
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானங்களில் நடந்து வருகிறது.
இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் வடக்கு- கிழக்கு மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் முறையே வடக்கு மண்டல அணி 405 ரன்னும், கிழக்கு மண்டல அணி 230 ரன்னும் எடுத்தது. 175 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வடக்கு அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 388 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அங்கித் குமார் 168 ரன்னுடனும், ஆயுஷ் பதோனி 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வடக்கு அணியில் அங்கித் குமார் 198 ரன்னில் (321 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த நிஷாந்த் சிந்து தனது பங்குக்கு 68 ரன்கள் விளாசினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஆயுஷ் பதோனி முதல்தர கிரிக்கெட்டில் தனது 2-வது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். 146.2 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 658 ரன்கள் குவித்து 833 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த போது ‘டிக்ளேர்’ செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆயுஷ் பதோனி 204 ரன்களுடனும் (223 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), கன்கையா வதாவன் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் வடக்கு அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மத்திய மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் 679 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வடகிழக்கு அணி 58 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மத்திய மண்டல அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. இதில் தெற்கு- வடக்கு, மத்திய- மேற்கு மண்டல அணிகள் மோதுகின்றன.