முதல் டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 71 ரன்கள் அடித்தார்.;
image courtesy:ICC
டார்வின்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிம் டேவிட் 52 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மபாகா 4 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - ரிக்கெல்டன் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த பிரிட்டோரியஸ் (14 ரன்கள்), பிரெவிஸ் (2 ரன்கள்) தாக்குப்பிடிக்கவில்லை.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரிக்கெல்டன் தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால் அவரால் அதிரடி காட்ட முடியவில்லை. அவருடன் சிறிது நேரம் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்டப்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்களில் ஜார்ஜ் லிண்டே (0), கார்பின் போஷ் (2 ரன்கள்) மற்றும் செனுரன் முத்துசாமி (0) என சொற்ப ரன்களில் நடையை கட்டினர். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் ரிக்கெல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.
ஆனால் அந்த ஓவரின் 2-வது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அதோடு தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 71 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.