முதல் டி20: கில், பாண்ட்யா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா..? கேப்டன் சூர்யகுமார் பதில்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.;

Update:2025-12-09 15:35 IST

image courtesy:BCCI

கட்டாக்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்