புற்றுநோயால் அவதிப்படும் ஆஸி.முன்னாள் கேப்டன்.. 6-வது முறையாக ஆபரேசன்
இவருக்கு முதல் முறையாக 2006-ம் ஆண்டில் தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.;
image courtesy:AFP
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதே ஆண்டில் ஆஷஸ் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 115 டெஸ்டுகளில் 28 சதம் உள்பட 8,643 ரன்களும், 245 ஒரு நாள் போட்டிகளில் 8 சதம் உள்பட 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.
44 வயதான கிளார்க்குக்கு முதல் முறையாக 2006-ம் ஆண்டில் தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டில் நெற்றியிலும், 2023-ம் ஆண்டில் மார்பு பகுதியிலும் புற்றுநோய் செல்களை ஆபரேசன் மூலம் அகற்றி 27 தையல் போடப்பட்டது.
இந்த நிலையில் 6-வது முறையாக ஆபரேசன் செய்திருக்கும் கிளார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தோல் புற்றுநோய் ஆஸ்திரேலியாவில் அதிகமாக உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு ஆபரேசன் நடந்தது. உங்களது தோலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள் என கனிவோடு கேட்டுக் கொள்கிறேன். வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. எனது விஷயத்தில் தொடர் பரிசோதனைகளும், நோயை முன்கூட்டியே கண்டறிந்தது தான் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.