வெளிநாட்டு வீரர்கள் குறித்த கவாஸ்கர் விமர்சனத்திற்கு ஆஸி.முன்னாள் வீரர் பதிலடி

இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது உங்களுடைய வேலை கிடையாது என்று சுனில் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்களை விமர்சித்தார்.;

Update:2025-09-02 15:35 IST

image courtesy:PTI

மெல்போர்ன்,

துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது.

குறிப்பாக சமீப காலமாக வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய தேர்வுக்குழுவை ஏபி டி வில்லியர்ஸ், பிராட் ஹாடின் உள்ளிட்ட பல முன்னாள் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.

இதற்கு இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்திய கிரிக்கெட் குறித்து கவலைப்பட வேண்டும்? என்றும் இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது உங்களுடைய வேலை கிடையாது என்றும் கவாஸ்கர் விமர்சித்தார்.

இந்நிலையில் கவாஸ்கரின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான பிராட் ஹாடின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பிராட் ஹாடின் பேசியது பின்வருமாறு:- “அவர் (சுனில் கவாஸ்கர்) இந்த நிகழ்ச்சியைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் உலகளவில் செல்ல தொடங்கி உள்ளோம். உலக கிரிக்கெட்டில் தற்போது பேசப்படும் விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதே எங்கள் வேலை. நாங்கள் ஐ.பி.எல்.-ல் அவரை (ஐயர்) பயிற்சி செய்தோம், எனவே எனது கருத்தை உறுதியாகக் கூறுகிறேன்.

அவர் அணியில் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதே சமயம் மற்ற வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அதற்கு காரணம் பஞ்சாப் அணியை சிறப்பாக வழி நடத்திய ஸ்ரேயாஸ் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடிய நல்ல கேப்டன். அதனாலேயே அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்” என்று கூறினார்.

பிராட் ஹாடின், ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்